Book review மண்ணில் தெரியுது வானம் | ந.சிதம்பர சுப்பிரமணியன் | Gandhi Study Centre

February 12, 2020

காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் புத்தகம்: “மண்ணில் தெரியுது வானம்” ஆசிரியர்: ந.சிதம்பர சுப்பிரமணியன்

பேச்சாளர் பற்றி:
திரு. ச.கண்ணன் அவர்கள், வங்கியில் பணியாற்றியவர். கர்நாடக இசை, தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்கள், வானவியல் என பல்வேறு துறைகளில் ஆர்வம் உடையவர். “தென்னிந்திய வைணவம் ஓர் அறிமுகம்” “வைணவம் வழக்குச் சொற்களும் சிறப்புச் சொற்களும்” என இரு நூல்களை எழுதியுள்ளார். இதற்கு முன்னர் “விண்மீன்கள் வகை வடிவம் வரலாறு”, “சில படைப்பாளிகள்”, “சுவாமி விவேகானந்தரைப் பற்றி மகாகவி பாரதி கூறியவை” மற்றும் “தமிழர் புத்தகங்கள்” உள்ளிட்ட பல நூல்களை புதன் வாசகர் வட்டத்தில் அறிமுகம் செய்து பேசியிருக்கிறார்.

நூல் பற்றி:
இந்நூல், வாசகர் வட்டத்தின் மூலம் 1969-இல் மகாத்மா காந்தி நூற்றாண்டுச் சிறப்பு வெளியீடாக வந்த இந்நூலை பின்னர், கிட்டத்தட்ட 47 வருடங்களுக்குப் பிறகு நற்றிணை பதிப்பகம் மீண்டும் வெளியிட்டுள்ளது. சுதந்திரப் போராட்டத்தை பின்னணியாக கொண்டு உருவான படைப்பிலக்கிய நூல்களின் வரிசைகளில் மிக முக்கியமானது இந்நூல். சுதந்திரப் போராட்டம் நடந்த விதம், சராசரி மனிதர்களின் வாழ்வை அது எவ்வாறு பாதித்தது, யார் யார் என்ன நிலைப்பாடு எடுத்தார்கள், பத்திரிகைகளின் பங்கு, அந்நாளில் சென்னை எப்படி இருந்தது என காலக் கண்ணாடியே இந்நூல். சுதந்திரப் போராட்டத்தில் காந்திய வழிமுறைகளின் தாக்கம் குறித்த விரிவான விவாதம் இந்நூலில் மையமாகவே விளங்குகிறது எனலாம். “காந்திய யுகத்தில் நான் அனுபவித்ததையும், கண்டதையும் இந்நாவலில் காட்ட முயன்றிருக்கிறேன்” என்று இந்நூல் பற்றி அதன் ஆசிரியர் சிதம்பர சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் பற்றி:
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மழவராயனேந்தல் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவரான நூலாசிரியர் சிதம்பர சுப்பிரமணியன் அவர்கள் (1912-1977), மணிக்கொடியில் வெளியான “வாழ்வின் முடிவு” என்ற சிறுகதையின் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். சக்கரவாகம், சூரியகாந்தி, வருஷப் பிறப்புக் கதைகள் என மூன்று சிறுகதைகள் தொகுப்புகள் மற்றும் இதயநாதம், மண்ணில் தெரியுது வானம், நாகமணி ஆகிய நாவல்கள் இவரது படைப்புகளாகும். ஊர்வசி என்ற நாடகத் தொகுப்பும் எழுதியுள்ளார். இவரது பல நாடகங்கள் சேவா ஸ்டேஜ் திரு. சகஸ்ரநாமம் அவர்களால் மேடையேற்றப்பட்டன. இவருடைய படைப்புகளில் சில இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இடம்: காந்தி கல்வி நிலையம், தக்கர் பாபா வித்யாலயா வளாகம், 58 வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை – 600 017.

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: